செவ்வாய், 31 ஜனவரி, 2017

' எட்டு போட்டா....தப்பா? "


சில சம்பவங்கள்.... அவை தொடர்பானவை மறக்கவே முடியாமல் காலமெல்லாம் மனதின் உள்ளுக்குள் உறங்கும். 

இன்ப துன்ப நிகழ்வுகள் என்கிற பேதம் அவற்றுக்கு இல்லை. சில நினைக்க நினைக்க என்ன ?  எவ்வாறு ? எப்படி ?   என்பன போன்ற கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும். மனசு அப்படி.

சில பாடல்கள் எங்காவது கேட்கும் போது....ஏதாவது ஒரு நிகழ்வு சடார்ன்னு நினைப்பில் வரும்..

சில இடங்களுக்குச்  செல்லும் போது அந்த இடத்தில் என்றோ எப்போதோ நடந்த சம்பவங்களும் கண்முன்னே வந்து போகும்...நேற்று முன் தினம் குற்றாலம் போன இடத்தில் அண்ணா சிலை பக்கம் நினைவு போனது.....

எனக்கு தந்தை தாய் வழியில் மாமா மார்கள் நிறைய பேர்கள் உண்டு.அவர்கள் பெற்று எடுத்த மைத்துனர்கள் ஆண் பெண் கிளை வழியில் நிறையவே  இருக்கின்றார்கள்.

என் வயது மற்றும் அதற்கும் கீழே உள்ள மைத்துனர்கள் நம்ம மாவட்டத்துக்கு பக்கத்துக்கு இடங்களுக்கு டூர் போறதா இருந்தால் மறக்காமல் என்னை அழைப்பார்கள்..

நம்மால தூர தொலைவுகளுக்கு வாறது கஷ்ட்டம்ன்னு அவுகளுக்கும் தெரியும்.காரணம் எனக்குள்ள வேலைகள் அப்படி...
நாம் போகல்லன்னா  அங்க இங்க இருக்கின்ற நம்ம நண்பர்களின் தங்குமிட வசதிகளைக் கேட்டு வாங்கிக் கிடுவார்கள். 

சில நேரங்களில் ரொம்ப பவ்வியமா....வண்டி வாகனங்களை கேப்பார்கள்..அப்பவெல்லாம் மோட்டார் பைக்குகள் தான். இப்போ கார் வரை வந்தாச்சு..

ஒரு நாள் .....குற்றால சீசன் கால நாளில் என்னுடைய பாசமிக்க இளைய மைத்துனர் ஒருவர்  ....அவங்க நட்புகளோடு , ஆமா சேக்காளிகளோடு  அஞ்சாறு பைக்குகள் சேர்ந்து குத்தால ரோட்டில் போறதைப் பார்த்தேன்....போகட்டும் போகட்டும் .பத்திரமா போயிட்டு வரட்டும் என்று மனசுக்குள் வாழ்த்திக்கொண்டேன். 

அன்னைக்கு திருனவேலி வரை இளஞ்சாரல் ரொம்ப அழகா தூரிக்கொண்டு இருந்தது....வீட்டுக்கு வந்து என் மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நானும் குத்தாலத்துக்கு வந்தாச்சு....

பொளுகிற ஒரு அஞ்சு மணி இருக்கும்....மெயின் பால்ஸ்..பக்கம் குளிச்சுட்டு....பிள்ளைகள் வரவை எதிர் பார்த்து கார்கள் நிப்பாட்டி வைக்கிற இடத்தில் நின்னுகிட்டு இருந்தேன்.
செல்போன் மணி அடிச்சது.......எடுத்தேன். காலையில் பார்த்த மச்சினன் போன்ல வந்தான்...

“ மச்சான்....எங்க இருக்கிய “
“ என்னப்பா....சொல்லு என்ன விஷியம் “
“ ஒன்னுமில்லை...ஒரு சின்ன பிரச்சினை “
“ எங்கேப்பா....என்ன நடந்துச்சு..”
“ நீங்க குத்தாலம் போலிஸ் ஸ்டேசன்  வரைக்கும் வரமுடியுமா “
“ எதுக்குப்பா...போலிஸ் ஸ்டேசனுக்கு வரணும் ....என்ன நடந்துச்சுன்னு சொல்லுப்பா ...”
“ வாங்களேன்....நேர்ல சொல்லுறேன் எவ்வளோ  நேரத்தில இங்கன வருவீங்க?....”
“ என்னத்த சொல்லப் போறானுவளோ.....என்ன கதையோ ...பதட்டமா பேசுரானுவளே ....   ...என்று யோசிச்சுக்கிட்டே .....ம்...ஒரு கா மணி நேரத்தில் வந்துடுவேன் என்றேன்  “
“ கா...மணி நேரத்திலா....நீங்க ஊர்ல இருந்து அவ்ளோ வேகமாவா வரப்போறீங்க “
“..யே.....நான் போலிஸ் ஸ்டேசன் பக்கம் ....அருவிக்கரைல தான் நிக்கேன்....கொஞ்சம் பொறு... ந்தா வாறேன்.”
“ சீக்கிரமா....வாங்க மச்சான் .” என்று சொல்லிக்கிட்டே போனை வச்சுட்டான்.
என்னவோ...ஏதோன்னு நான் பேசினத ....மோப்பம் பிடிச்ச எங்க வீட்டு ....மகராணி “ என்ன போன்ல..... என்னத்த பேசுறிய. ?...”..
நான் நடந்ததை சொன்னேன் ...


“ அப்படியா........சின்ன புள்ளைகளா பைக்கில போனாங்களே ....சீக்கிரமா போங்க...யாருக்கும் எதுவும் ஆகல்லியே....என்னவோ பெரிய பிரச்சினை...அதான் உங்களைக் கூப்பிடுறானுவோ....” என்றார்.
எங் கூட வந்த எல்லோரையும் குற்றாலம் பள்ளிவாசலில் உள்ள தங்குமிடத்தில் உட்கார வச்சிட்டு ....நான் காவல் துறையில் பணியாற்றும் என்னுடைய இன்ஸ்பெக்டர் நண்பருக்கு...போன் பண்ணிட்டு குற்றாலம் போலிஸ் ஸ்டேசனுக்கு போனேன்....

குற்றாலம் கலைவாணர் அரங்கம் முன்புள்ள காவல் நிலையம் .அங்கே ஸ்டேசன் முன்பாக....ஒரு பத்து பதினைந்து இளைஞர்கள்....நின்றுகொண்டு இருந்தார்கள்..அவ்வளவு பேரும்...என் மைத்துனனோடு வந்தவர்கள் தாம்.
“....என்னப்பா...என்ன நடந்துச்சு.....எதுக்கு இங்க வந்துருக்கிய...ஏம்பா....”
என்று கேட்டேன்.

“ ஒன்னு மில்லை மச்சான்....அண்ணா சிலை பக்கம் வந்துக்கிட்டு இருந்தோம்....எங்க எல்லோரையும் நிப்பாட்டி ....வண்டியோடு....கூட்டி வந்து....வண்டிய நிப்பாட்டி சாவிய எடுத்துட்டு போட்டாங்க”...என்றான் என் பாசக்கார மச்சினன்.

“ டே...வண்டில..ட்ரிபிள்ஸ் வந்தியளாடே ?”  

“ இல்ல மச்சான்.”

“..அப்போ லைசென்ஸ்...ஆர்.சி....இன்சூரன்ஸ் பேப்பர் வண்டில இல்லாம வந்தியளாடே “ ?  

“ லைசன்ஸ் புக எல்லாம் கரைக்க்டா இருக்கு மச்சான்.”

“ அப்போ எதுக்குப்பா ....உங்க வண்டிய.... இங்க புடிச்சிப்போட்டு இருக்காங்க...யார் மேலயாவது வண்டிய விட்டுட்டீங்களா...இல்ல எந்த கார் பைக் மேல இடிச்சிட்டீங்களா  ? “

“அப்படிலாம் ஒன்னும் நடக்கல்ல மச்சான்...” என்று அங்க நின்ன பயலுக..... ஒன்னு போல சொன்னனுக.

ஆனாலும்....அவனுக முகத்தில எதையோ இந்தப் பயபுள்ளைக மறைக்கிறா னுவோன்னு...ஒரு  “ இது..” தெரிஞ்சுது..

.சரி....எதுவா இருந்தாலும் உள்ள போய் கேட்டுக்குவோம்...என்று அங்கே இன்ஸ்பெக்டர் முன்னே போய் நின்றேன்.

“ வாங்க மாமா..உட்காருங்கள் “ என்று அந்த அதிகாரி என்னை வரவேற்று உட்கார வைத்தார்..எனது காவல்துறை இன்ஸ்பெக்டர் நண்பரும் வந்துவிட்டார்...பரஸ்பரம் நலம் விசாரிப்பில் கொஞ்ச நேரம் போனது.
எங்க பக்கம் பெரும்பாலான அதிகாரிகள் உறவு சொல்லியே அழைத்து கண்ணியப்படுத்துவார்கள்....கண்டிப்பானவர்கள்....மத்தியில் அப்படி ஒரு உபசரிப்பும் இருக்கும்....

கடுமையானவர்களிடம் அவ்வாறு எதிர் பார்க்க முடியாது.....ஒன்னுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் .....பொய் வழக்கில் உள்ளே தள்ளியவர்களை நான் அறிவேன். கண்ணியமானவர்கள் பணி ஓய்விற்குப் பிறகும் கண்ணியமாகவே வாழ்கின்றார்கள்.

“ என்ன ஊர்ல இருந்தா வாறீக....”

“ இல்ல சார் ...நான் தற்செயலா ...குடும்பத்தோடு குத்தாலம் வந்தேன்...இவனுங்க போன் பண்ணுனாங்க...அதான் என்ன ஏதுன்னு...தெரிஞ்சுக்கலாம்ன்னு வந்தேன்....”
அந்த அதிகாரி மேசையில்  ஏழு..எட்டு பைக்குகளின் சாவிக்கொத்துகள் கிடந்தன.....

“ இவனுக...என்ன செஞ்சான்னு கேட்டியளா “

“ இல்லையே...ஒருத்தனும் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிறாங்களே’..
எனக்கு பதட்டமாய் இருந்தது...
அந்த இன்ஸ்பெக்டர்....தலையை குனிந்து கொண்டார்....” இவனுக என்ன பன்னுராங்கன்னு கேட்டேன்.....எல்லாரும் காலேஜ்ல படிக்கிறதா  சொல்லுரானுங்க....அதோடு உங்க குடும்ப உறவையும் சொல்லுறாங்க..”
என்னோட  டி.எஸ்.பி.யும் நின்னு .......இவங்களை புடிச்சு ....வண்டிகளை இங்க கொண்டு வந்து இருக்கோம்.

“ என்ன செஞ்சானுக ? “

“ அங்க யாரப்பா....வெளியில நிக்கிறது...உள்ள வாங்கடே..” என்றார்.
ஒவ்வொருத்தனா உள்ளே அந்த அறைக்குள் வந்து நின்றார்கள்,.

“ என்ன பன்னுனாங்கன்னு நீங்களே கேளுங்க...”

“ என்னப்பா...சொல்லுங்களேன்டே “...

“ அண்ணா...சிலைக்கு பக்கத்தில..... வண்டிய..... ஒட்டிக்காட்டினோம்...”

:” வண்டிய....ஒட்டிக்காட்டினியளா...” அப்போது தான் அந்த அதிகாரி முகத்தில் கொஞ்சம் கோபம் தெரிந்தது...

“ அண்ணா சிலைக்கு முன்னால....இங்க நிக்கிற இந்தப் பயலுவல்லாம் எட்டு போட்டு ...காட்டுரானுவ....யார்கிட்ட அங்க நிக்குற எங்க கிட்ட...நாங்க என்ன ஆர்.டி.ஒ.வேலையா பார்க்கிறோம். ”...
இதைக்கேட்டதும்..எனக்கு அடக்க முடியாத ....சிரிப்பு வந்தது....வெளியே காட்டிக்கொள்ளவில்லை..
அந்த இளைஞர்களிடம் ...” கொஞ்சம் ஏல...வெளியே...போங்க..”.என்று சொன்னார்..

கொஞ்ச நேரம் அங்கே அமைதி .... என்கூட வந்த அந்த இன்ஸ்பெக்டர்...
” காக்கா......இவனுகளை கண்டிச்சு வைங்க....நியுசன்ஸ் கேஸ் போட்டு....கோர்ட்டுக்கு அனுப்பிடக் கூடாதேன்னு நானே இவங்களைக் கேட்டுக்கிட்டேன்...இந்த ஊர் அப்பிடி.இங்க குளிக்க வாரவனுவளை விட குடிக்க வாரவங்க அதிகம்....அப்புறம் தள்ளிக்கிட்டு வாரவங்க வேற....அருவிக்கரையில் கடுமையா கட்டுப்பாடுகள் இருக்கு.இவ்வளோ  வச்சும் .....பண்ணுற சேட்டைகளைப் பார்த்தீயளா ....யார் வி.ஐ.பி...யார் கள்ள வாளிப்பய ன்னே தெரியாது...கஞ்சா கிஞ்சா ....எவனாவது விக்கிறானுவாளான்னு பார்க்கணும்...பொம்பள புள்ளைகளை கேலி பன்னுறவன்...சீட்டாட்டக் கோஷ்ட்டி...சண்டை போடுறவன்...அப்புறம் ஜட்டி மட்டும்  போட்ட்டு குளிக்கிரவன்....கூச்சல் கூப்பாடு போடுறவன்...என்று அடுக்கிட்டே போனார்.

செங்கோட்டை ....அண்ணன் கடுமையா சிபாரிசு செய்தார்...

“..சரி..பைன கட்டிட்டு வண்டிய கொண்டு போகச்சொல்லுங்க...”

“ பைன் எவ்வளவு வருது ?”

“ வண்டிக்கு...700…800..வரும்.”
எனக்கு பகீர் என்றது...
கொஞ்ச நேரம் அந்த அதிகாரிகளிடம் பேசினேன் ....மொதலாவதாக...எவன் இந்த சேட்டையை செய்தானோ...அவனுக்கு கண்டிப்பா...அபராதம் போட்டே தீரணும்...என்பதில் அந்த இன்ஸ்பெக்டர் உறுதியாய் இருந்தார்....
கடைசியில் ....இந்தப்பையங்கள் மத்த தப்புகள் வேற எதுவும் செய்யல்லை...அதனால பேருக்கு ஒரு வண்டிக்கு...அபராதம் போட்டார்.அதுவும் யாரிடத்தில் லைசன்ஸ் இல்லாமல் வண்டி இருந்துச்சோ அவனுக்கு மாத்திரம் 100 ரூபாய் அபராதம்.
எல்லாம் முடிந்தது....காவல் அதிகாரிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

” சரி சரி பைனக்கட்டிட்டு...ஊருக்கு வாங்கடே..” என்றேன்.

“...மச்சான்...கொஞ்சம் நில்லுங்க...ஒரு 1000 ரூபாய் தந்துட்டு போங்களேன்.”

“உங்க கிட்டே எவ்வளவுதான் துட்டு வச்சு இருக்கிய”?"

" மொத்தமா சேர்த்து ஒரு 80 ரூபாய் தேறும்."

" நீங்களும்..ஒங்க ரூபாயும் ...போய் அபராதத்தை கட்டிட்டு ...செங்கோட்டையில சாப்பிட்டிட்டு பத்திரமா ஊர் வந்து சேருங்கன்னு ....அவன் கேட்ட தொகைக்கும் அதிகமா எல்லோருக்கும் சாப்பிடும் அளவுக்கு....ரூபாய கொடுத்துட்டு புறப்பட்டேன்.
ராத்திரி மணி எட்டு  ஆகிவிட்டது.
என் மனைவி...பிள்ளைகள் இருந்த பள்ளிவாசலுக்குப் போய் சேர்ந்தேன்.

“ என்ன இவ்வளோ நேரமா போய்ட்டிய..”
“ஆமாம்”

“ சரி அவங்களை எல்லாம் போலிஸ் ஸ்டேசனை விட்டு கூட்டி வந்துட்டீங்கள்ளே ... “

“ஆமா...”

“ அவங்க என்ன பண்ணினான்னு....புடிச்சிட்டு போனாங்களாம்...”

“ ஆ.....ம் எட்டு போட்டு காட்டி இருக்கானுவ”

அடுத்து எனக்கு அங்கே வந்த கேள்வி....

“ எட்டு போட்டா.....தப்பா”?
.

....சனி, 26 நவம்பர், 2016

START……SERIOUS….OUT..அடிச்சாம் பாரு.....தந்தி !


இப்ப உள்ள தம்பிமார்கள் கிட்டே போய்....தந்தி ன்னா என்னான்னு ?... ....கேட்டுப்பாருங்க....

முக்காவாசிப் பேருகளுக்கு ,அது என்னான்னு சொல்லத்தெரியாது......

கொஞ்சம் படிச்ச ஆட்கள் அத...டெலகிராம்ன்னு அழுத்தம் திருத்தமா....சொல்லுவாங்க.... 

.கடன் பத்திர விற்பனை....வி.பி.பி....புஸ்தக விற்பனை, சிறுசேமிப்பு, மணியார்டர்ன்னு போய்க்கிட்டு இருந்த போஸ்ட் ஆபீஸ்ல ,  புதுசு .....புதுசான  புது....யாபாரங்கள்லாம் தபாலாபீஸ்ல...... பார்சல் மூலமா.......செய்றாங்க.....கங்கை நீர் விற்பனை..வரை அங்கே வந்தாச்சு.. 

இப்போ ....500,  1000 ரூபாய் நோட்டுகளை,  செல்லாமல் ஆக்கினதுல புது  2000 ரூபாய் சில்லற மாத்துற வேலையெல்லாம் பண்ணுறாங்க........ஆனா...மக்களுக்கு ஒபயோகமா இருந்த.....தந்திக்கு மத்திய அரசு மூலமா.. மூடு விழா கொடுத்துட்டாங்க ......

கட் கட்....கடா....கட் டட்....என்று தபால் ஆபீஸ்ல ....ஒரு சின்ன விசைய்ல இருந்து சப்தங்கள் வந்து கொண்டு இருக்கும்....அந்தக்கருவி தருகிற ஓசையை....உள்வாங்கிக்கொண்டே...அந்த தபாலாபீஸ் போஸ்ட் மாஸ்ட்டர் அல்லது அவருக்கு இணையானவர் பக்கத்தில் ஒரு தாளில் எழுதி ....யார் விலாசத்திற்கு தந்தி வந்து இருக்கோ....அவுக வீட்டிற்கு அத அனுப்பி வச்சிருவாக....

போன் இல்லாத....செல் போன் இல்லாத.......காலங்களை இளையதலைமுறை கொஞ்சம் கற்பனை பண்ணிக்கொண்டு பார்க்கணும்...நம்பவே முடியாது...ஊர்ல  நாலு அஞ்சு வீட்ல...போன் இருந்ததே பெரிய விஷயம்...

இப்போ செல் இல்லாம யார் இருக்கா.....இளசுகள் முதல் கெளடுகள் வரை ..... வச்சு இருக்குதுக..

“ அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் “....ன்னு.....தந்தி வாசகங்களைப் பார்த்து தான் சொல்ல ஆரம்பிச்சார்கள்...அந்தக்காலத்து வேலை வாய்ப்பு உத்திரவுகள் எல்லாம் தந்தியிலும் தபாலிலும் தான் வந்து சேரும்...

உலகத்தின் எந்த மூலையிலும்  தந்தி அனுப்பவும் பெறவும் முடியும்.
கிராமங்களில்....தபால் காரரர்கள் வருகிற நேரம் தாண்டி.....கைகளில் ஏதாவது தந்தி கொண்டு வந்தார் என்றால்....அது  “ எழவு விழுந்ததை கொண்டு வாராம்ல.”.....என்றே நம்பிக் கொண்டு இருந்தார்கள்....

வந்த தந்திய...பிரிச்சி பார்க்கிற வரை... நெல கொள்ளாது... நூத்துக்கு எம்பது சதமானம்....உசுர் போய்ட்ட செய்திகளைத்தான் தந்தி வாசகங்கள் கொண்டு வரும்.

சில வேளைகளில் ரிப்ளை...டெலிகிராம் மூலம் பணத்தைக் கட்டி தந்தி கொடுத்தவருக்கே.....பதிலும் அனுப்ப முடிந்தது.
பண்டிகை ,பதவியேற்பு, பிறந்த நாள், மணந்த நாள்  வாழ்த்துக்கள்  இறப்புக்கு இரங்கல்,..இப்பிடி பல தரப்பட்ட .... வேலைகளுக்கு தந்தி...என்கிற டெலக்ராம் ரொம்ப வசதியா இருந்துச்சு.
வக்கீல் ஆபீசுகளில் இருந்து ....உயர் அதிகாரிகளுக்கு உள்ள நிலைமையை சொல்ல...அனுப்பப்படும் தந்திகளுக்கு....ரண்டு....மூனு நாட்களில் ...பணம் கட்டி நகல வாங்கிக்கலாம்.. இப்படிலாம் அறிவிச்சோம்....அதல்லாம் மீறி...இப்படி பண்ணிட்டாக ன்னு சொல்ல தந்தி கொடுத்தத காட்டிக்கலாம்..சாட்சிக்கு தந்தி ரொம்ப ஏதுவா இருந்துச்சி..
பல அதிகாரிங்கள....சட்டத்தை சொல்லி வரம்புமீறி கடுமையா போகாம.....நிறுத்தி வச்சது தந்தி தான்னு என்னால் சொல்ல முடியும்....
சட்டப்பூர்வமா....கேப்பதற்கும்,நாசூக்கா மெரட்டுரதற்கும் தந்தி பயன் பட்டுகிட்டது.

நாம....இங்கன ஒரு தந்தி...படுத்தின பாட்டை ...சொல்லித்தான் ஆகணும்.

அப்போவெல்லாம்...நாங்க....கல்லூரி முடிச்ச நேரம்....
ராத்திரியெல்லாம் முழிப்பு.....பகலில் தூக்கம்ன்னு சொல்ல முடியாம...ஒரு காலம்.
நானும் என்னோட சேக்காளிகளும் .....ரண்டாம் பிளே...ஆமா....செகண்ட் ஷோ சினிமா பார்க்கப்போரத வழக்கமா வச்சிருந்தோம்...
ஆனா.... வீட்ல யார்கிட்டயாவது எங்க போறோம் ன்னு  சொல்லிட்டுத்தான் போகணும்....

இப்ப உள்ள விழிப்புணர்வு அப்ப ஏது...?

அப்ப எங்க செட்டில் .....யாருக்கும் கல்யாணம் ஆகாத பருவம். அதனால திருனவேலி டவுன்,  ஜங்சன் , பாளையங்கோட்டை என்று நள்ளிரவுகள்...தாண்டியும் மோட்டார்சைக்கிளில் சுற்றுவோம்...மத்த படியான வில்லங்க,விவகாரங்களுக்கெல்லாம் போக மாட்டோம்... .எங்க அண்ணன் புகாரி எப்பவாவது  எங்களோடு.வருவான்.....

விடிய..... விடிய திருனவேலி ஜங்க்சனில் பஸ் ஸ்டாண்டை சுற்றி....கடைகள் , டீ ஓட்டல்கள், திறந்திருக்கும்....

திருனவேலி ஜங்சன் பழைய பஸ் ஸ்டாண்டில் அப்போ ,  அரசன் பேக்கரி.....ஐஸ்கிரீம் கடை ரொம்ப பிரபலம்....ராத்திரிவேளைகளில் ,  நல்ல டீ குடிக்கனும்ன்னா...அங்க தான் போகணும்...

பசி எடுத்தா....கேக்கு,  பண்ணு, வட்டரொட்டி, தேங்காப்பூ ரொட்டி , சாக்குலேட், பிஸ்கட் ,பப்ஸ் எந்த நேரத்திலும் திங்கலாம். 

ஒரு நாள் நாடு ராத்திரி தாண்டி ஒரு ரண்டு மணி இருக்கும்...நானும் அண்ணனும் அங்கே.....எதோ பசிக்கு  தின்று விட்டு....சூடான  டீயை உரிந்து குடிச்சுகிட்டு இருந்தோம்......

இப்ப உள்ள மாதிரி ...ஒன் வே...டூ வே கதையெல்லாம் அப்போ கிடையாது...அந்த நள்ளிரவு தாண்டியும்...வெளக்குகளாலே ஊரே....வெளிச்சமா இருந்தது. நாங்கள் அம்பேத்கர் சிலை பக்கம் நின்று...கொண்டு இருந்தோம்.

எங்கள் பக்கத்தில் ஒரு லாரி வந்து நின்றது....அதன் முன்புறம் இடது பக்கத்தில் இருந்து ஒருவர்...வேகவேகமாக.. குதித்தார்...அவர் எங்கள் இருவருக்கும் ....சொந்தக்காரர் .. ..அரசுப்பணியில் இருந்தார்.

என்ன...----இவர் லாரில வந்து குதிக்காறேன்னு..ஒன்னு போல ...நாங்களே.......கேட்டுக்கிட்டோம் ...வந்து இறங்கியவர் பதட்டமாக இருந்தார்...அதோடு எங்கள் இருவரையும் பக்கத்திலேயே பார்த்துவிட்டார்....

“ எப்பா....எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ?.....”
“ எங்க பெரியப்பா.....நல்லா இருக்கானா ?....”
“ சின்னப்பா...நல்லா இருக்கானா ?....”
“ அந்தப்பிள்ள....நல்லா இருக்காப்பா..?...” என்று படபடப்பாகக் கேட்டுக் கொண்டார்....
“ அந்தப்பிள்ளை “  என்பது....அவரது 25 வயது மகன் வயதைக்  கொண்ட இரண்டாம் மனைவி...
நாங்கள் இருவரும்....” உங்க வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்க..”.என்று எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னோம்...

“ ஆமாப்பா.....நீங்க ஊர்ல இருந்து எப்ப பொறப்பட்டீங்க...?” என்று ஆவல் மேலிட கேட்டார்...

“ நாங்க...ஒரு பத்து மணிக்கு கிளம்பியிருப்போம்....சரி...எங்க இருந்து இந்த லாரில வாறீங்க?...இன்னைக்கு பஸ் ஒடல்லியே?...” அண்ணன் கேட்டான்.
“ நான் விழுப்புரம் பக்கம்...ஒரு கிராமத்தில் இருந்து ரண்டு மூனு இடத்தில் ...லாரி லாரியா மாரி....காலைல ஏழு  மணிக்குப் புறப்பட்டவன்...இப்ப தான் வந்து சேருறேன்....”என்றார் அவர்.

நாங்க வாங்கிக் கொடுத்த கேக்..துண்டுகளைக் கூட வேண்டான்னு சொல்லிட்டு சுடச்சுட கொடுத்த டீயை ....கடகடன்னு குடிச்சு முடிச்சார்.
நாங்க சொன்ன எதையும் நம்புகிற மனப்பக்குவத்தில்  அவர் இல்லை....நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு இருந்தார்..” போதுமப்பா...கிளம்புங்கப்பா “என்று சொல்லிவிட்டு அந்த அகால வேளையில் ...எங்களோடு மோட்டார் சைக்கிளில் மூன்றாவது ஆளாக அமர்ந்து  கொண்டார்...

“ என்ன...இவர் ஏன் இப்படி துடிக்கிறார்?....ஒன்னையும் சொல்லித்தொலைக்க மாட்டேங்கிறாரே...?  என்னவோ?....ஏதோ?...”....என்று பல்வேறு வில்லங்கமான யோசனைகள் மனதில் விதவிதமாக வந்து போக........ நான் பைக் ஒட்டிக்கொண்டு இருந்தேன்....

எங்கள் வீட்டின் பக்கத்து  தெருவில் தான் அவரும் குடியிருந்தார்...
நாங்கள் அந்த மோட்டார் சைக்கிளில் அவரோடு நாங்கள்...நுழையும் போது....அந்த தெரு அமைதியாக இருந்தது....
அவர் வீட்டு முன்னர் போய் இறங்கினோம்...

“ ஏய்....யார்ரா இருக்காங்க.....கதவத்திறங்க...”.என்று  சொல்லிக்கொண்டே....படபடவென்று....அவரது வீட்டின் கதவைத்தட்டினார்...

கொஞ்சம் மெதுவாக....அவரது மனைவி வந்து கதவைத்திறந்தாள்.

கதவைத் திறக்க அவர் போட்ட..கூப்பாட்டில் ....அடுத்த வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டு இருந்த ஒருவரும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார்....நாங்கள் நான்கு பேரும் உள்ளே நுழைந்தோம்...

அவரது மூத்த மனைவிக்கு பிறந்த பெரிய மகன்,  மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துகொண்டு இருந்தான்....

முன் வீட்டில், இரண்டு குழந்தைகள்....பாயின் மீது,  தூங்கிக் கொண்டிருந்தன.  அவர் மனைவியும்....அவசர அவசரமாக கண்களை இடுக்கி .....முழித்துக் கொண்டு ....தூக்கக் கலக்கத்தில் இருந்தாள்....

தன கைகளில் இருந்த பெட்டியை கீழே எறிந்து விட்டு....

” இந்தத் தந்திய....எனக்கு கொடுத்தது...... யாருலே...?”....என்று கடும் குரலில் கோபம் கொப்பளிக்க ஒரு சவுண்ட் கொடுத்தார்.அது அக்கம்பக்கம் பத்து வீடுகளுக்காவது கேட்டு இருக்கும்....

அப்போது தான் நானும் அண்ணனும் அவர் கையைக் கவனித்தோம்....ஒரு தந்தி இருந்தது...எந்த பாக்கட்டில் அந்தத் தந்திய வச்சு இருந்தாரோ தெரியல்லை.....

கொஞ்ச நேரத்தில்...எங்கள் கண் முன்னே...அவரது மூத்த மகனையும் , இளம் மனைவியையும்...மனுஷன் துவச்சு எடுத்திட்டார்...
அவரைத்தடுத்து நிறுத்த நாங்களும்..... பக்கத்து வீட்டு திண்ணையில் படுத்து கிடந்து..... எழுந்து வந்த ஆசாமியும்...போட்ட கூச்சலில் ...அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து ,....அந்த அர்த்த ஜாமப் பொழுதில் .......இன்னும் சில பேர்கள் வந்து சேர்ந்தார்கள்....

“  ஏல...நான் கேக்கிரம்ல.....இந்த தந்திய எனக்கு கொடுத்தவம்....எவம்ல?...”அவருடைய குரலில் ஆவேசம் வெளிப்பட்டது..அங்கிருந்த யாரும் பதில் சொல்லவில்லை...
பக்கத்து வீட்டு திண்ணை ஆசாமி....கொஞ்சம் தைரியத்தை


வரவழைச்சுக்கிட்டு.....” நாந்தாங் கொடுத்தேன்...இங்க ஒங்க ஊட்ல...நீங்க ஊருக்கு போன நாளாயில் இருந்து...ஒங்க மகனுக்கும் , இந்தப்புள்ளைக்கும் ஒரே தக்கம்,.தகராறு தான்...

உங்களை உடனடியா.....வரவழைக்கணும்...எப்படியாது ...அவசரமா.....கொடுன்னு  இந்தப்பிள்ளை தான் தந்தி  கொடுக்கச்சொல்லுச்சு....அதனால் நான் தான் வாசகம் அமைச்சு..... கொடுத்தேன் “.... என்றான்....

மனுஷன் அந்த ஆசாமியின் கழுத்தை சுற்றிப் போட்டு இருந்த மேல் துண்டை முறுக்கிகொண்டு .....இழுத்துக் கொண்டு.... “ ஏல நீயால....இப்படி ஒரு தந்தியக் கொடுத்தே...இதுக்கு என்ன அர்த்தம்னாவது ஒனக்குத் தெரியுமாலே.... ? ..”என்றார் ஆத்திரத்தோடு..
ஐயோ....இந்த ஆள இப்படியே அவர் கைகளில் கொடுத்தால்....சங்கு நெரிஞ்சு செத்துடுவான் போல இருக்கேன்னு.....அவனை விடுவித்தோம்....அடுத்த வீட்டு ஆசாமி...மேல்மூச்சு...கீழ மூச்சு வாங்க....இருமலோடு அமைதியானான்...

“  நான் தந்தி கொடுத்தது...தப்பாங்க?...”..என்று என்னிடம் கேட்டுக் கொண்டான்....

அவர் கைகளில் இருந்த தந்தி வாசகங்களைப் பார்த்தேன்....இவன் எழுதிக்கொடுத்த தந்திய அந்த போஸ்ட் மாஸ்ட்டர் எப்படி ...ஒத்துக்கிட்டு வாங்கி அனுப்பினாரோ?......வந்த சிரிப்பை....அடக்கிக் கொண்டு ....ஓடியே வந்து விட்டோம் ..
தந்தி வாசகம் இது தான்..

                                   START……SERIOUS….OUT..செவ்வாய், 5 ஜூலை, 2016

பெருநாள் சட்டை.


அப்போ எல்லாம் ஒரு பத்து பதினான்கு வயசு வரை பெருநாள் சட்டைத்துணி மற்றும் வேஷ்ட்டியை எங்க வாப்பாவும்,உம்மாவும் உடன் வர நாங்களே தேர்ந்தெடுப்போம்.
நினைவு தெரியாத காலத்திலே....அவுக எடுத்து தாரத உடுத்தி இருக்கோம்.
டெரிக்காட்டன், பாலிஸ்டர் துணிகளை சட்டைக்கு எடுத்து விட்டு எங்க பக்கம் யாதவாள் தெரு, கொம்பையா டெய்லர் வீட்டுக்கு போய் சேர்வோம்.
சட்டைக்காலர் எவ்வளவு பெருசா இருக்கோ அவ்வளவு பெருமையா இருக்கும்.
பெல்பாட்டம் எவ்ளோ அகலமா இருக்கோ அந்த அளவில் சட்டையின் வயிறு,முதுகின் கடைசியில் அகலமா விரிந்து இருக்கும்...பட்டி வைத்து பிரெஸ் பட்டன்களோடு தைப்பார்கள்.
" பெருநாளைக்கு மூணு நாளைக்கு முன்னாடியே தாறேன்" னு .....சொன்ன கொம்பையா, பெருநாள் அதிகாலை தான் தருவார்.
பல பெருநாள் ராவு தூக்கங்கள் கொம்பையா வீட்டு திண்ணையில் தான் நடந்தேறும்.
அவர் வீட்டின் தொழுவத்தில் , .... எருமை மாடுகள் மோழுகிற மூத்திர சிதறல்கள் திரேகம் முச்சூடும் தெளிக்கும்...
வீட்டுக்குப் போனால் சட்டை வேஷ்ட்டியில ஒரு மாதிரி வீச்சம் அடிக்கும்.
ஒரு மட்டும் காலை 6 மணிக்கு முன்னால சட்டை கிடைச்சிடிடும்....ரண்ண்டு சட்டை தைக்க கொடுத்தால் இன்னொன்னு 6 நோன்பு பெருநாளைக்குத்தான் கிடைக்கும்.
அந்த சட்டையை போட்டுக்கிட்டு தொழுதுட்டு வந்து கழட்டி வச்சிட்டுத்தான் மறு சோலி.....
உள்ளுக்குள்ளே மஞ்சக்கலரில், அரக்கு பார்டர் வச்ச துபாய் பனியன் நல்லா இருக்கும்..வெய்ட் கிளப் போற வார பையன்களை , அது எடுப்பா காட்டும்
அந்தக் கோலத்தில் என் போன்றவர்கள்,வீட்டுக்கு வெளியே நிப்பதைப் பார்த்தால் ,எங்க வாப்பும்மாவும், அவளோடு சேர்ந்த மீத்தீன் பெத்தும்மாவும் "மூத்தவளே.... இப்பிடி பாடிய போட்டுக்கிட்டு வெளிய , ஆத்துக்கு கீத்துக்கு போகாத..கண்ணு பட போவுதுலே,"என்று செல்லிவைப்பாக....
எங்க வாப்பா அந்தக் கோலத்தை ரொம்ப ரசிப்பா....." இது நல்லா இருக்குப்பா" என்பார்கள்.
பெருநாள ஒட்டித்தான்...கல்லூரி க்கு போக வரதுக்கு ,பேண்ட் தைக்கிற வழக்கம் உண்டு....
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வாசல் பக்கம், ஒரு மாடியில் பிரின்ஸ் டெய்லர் என்று ஒருவர் இருந்தார்.
திருனவேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பேட்டை வட்டார இளைஞர்கள் , மாணவர்கள் , நடுத்தர வயசுக்காரர்கள் அங்கே சென்று பேண்ட் தைத்து போடுவதை பெரிய கெளரவமாக வைத்திருந்தார்கள்...
இடுப்புக்கு கீழே இரண்டு கால்களும் பிரியும் இடத்தில்..... அழுத்தி , கைகளில் அளவு டேப் வைத்துக் கொண்டு... அவர் பேண்டின் கால் அளவு எடுப்பார்....கொஞ்சம் கூச்சமாக இருக்கும்...சிலர் நெளிவார்கள்....சிலர் குதிப்பார்கள்....அவ்வளவு சரியாக இருக்கும்...அவர் தைத்து தருகிற பேண்ட்.
இன்றைக்கு கொம்பையா...வாய்க்கால் பாலம் அருகே....ஒரு சின்னக் கடை வைத்து தொழில் நடத்துகிறார்...
"தாஸு...எப்படி போகுது "? என்று கேட்டேன்...
"பொன்பிளைங்க...சட்டை துணி மணி தச்சுக் குடுக்கேன்யா.." என்றார்.
ராம்ராஜ் இருக்கா...?
ஷெல்டன் இருக்கா..?
ஹேரி வில்லியம்ஸ் இருக்கா..?என்கிற கேள்விகள் எழுந்ததனால்...
எங்க ஊர் பக்கம் கொம்பையா....தையக்கடை ஜமால் , கோம்பை டெய்லர் ,திருமலை பேர் எல்லாம் மறந்து போச்சு....
தைய்யக்கடையோடு...சட்டை பேண்ட் துணியும் வச்சு யாவாரம் பண்ணுற டெய்லர்கள் நல்ல முன்னேறியிருக்கிறார்கள்.அதில் பலர் என் நண்பர்கள்.
வளரட்டும் பெருநாட்கள்...
மலரட்டும் மகிழ்ச்சிப் பெருக்கு!