வியாழன், 31 மே, 2012

கண்டதைத் தின்னா...........

 முன் ஒரு காலத்துல அதாவது 1975 கால கட்டத்தில் காச்சல் அடிச்சா நாட்டு மருந்து கசாயம் போட்டுக்குடிப்பதும்,மண்டைஇடி வந்தா பச்சிலை பத்து நெத்தியில போடுவதும்..ஒடம்பு அசதியா இருக்க மாதிரி தெரிஞ்சா இஞ்சி தட்டி விஷ கஷாயம் போட்டுக் குடிப்பதும்,.மேல் கொதிக்க மாதிரி இருந்தா ஓமத்திராவகம் சாப்பிடுவதும்,புள்ள உண்டாயிருக்கவா “மாது லங்க ரசாயனம்”ங்ர பேர்ல எதோ ஒன்னை பெண் மக்கள்,கண்ண மூடிட்டுக் குடிப்பதும் எங்க பக்கம் ரொம்ப சாதாரணம்..
உடம்புல புண்ணு வந்து கட்டியா மாறுனா, அந்த புண்ணுக்கு மேலே போட,அந்தப் புண் இருக்கிற அளவு வெட்டி எடுத்த துணியில் ரோடு போட உபயோகிக்கும் தார்ன்னு பேர் கொண்ட கருப்பு கீல் மாதிரி இருக்கிற ஒரு வஸ்தை தடவி, சிமினி விளக்கு அல்லது நட்டி விளக்கு தீ ஜுவாலையில் வாட்டி,அல்லது காட்டி கொஞ்சம் எழக வச்சி, இளஞ் சூட்டோடு வெது வெதுப்பா இருக்கிற பக்குவத்தில அத ஓட்டுவார்கள். அடுத்த நாள் கட்டி உடைஞ்சு உள்ளே உள்ளதெல்லாம் வெளியேறி காய்ஞ்சு விடும்..
இத முத்துமணிக்களிம்பூன்னு சொல்லுவாங்க.அந்தக் காலத்துல முத்துமணிடாக்டர்,முகம்மது லெப்பைத்தெரு ரைஸ் மில்லுக்கு எதிர்த்தாப்புல இருந்தார்.
அவர்தாம் அந்த மருந்தைக் கண்டு புடிச்சதா சொல்வாங்க.இப்பவும் அண்ணா வீதியில் கல்வத் டாக்டர் அந்த மருந்த வச்சிருக்கார்.
எங்க அப்பாம்மா, எங்களின் சின்ன பிராயத்திலே சுக்கு, அக்கரா, திப்பிலி, இஞ்சி, இளம் வேப்பிலை கலந்து, இடிஉரலில் இட்டு நச்சி ஆட்டி, சங்கு வச்சி வலுக்கட்டாயமா புகட்டி விட்டுருவா.
என் தங்கச்சிகள், தம்பி மாதிரி சில பேர்கள் குடிக்கல்லனா, பக்கத்தில நிக்கவங்க கையை காலை அமுக்கிப் புடிச்சு, மூக்கப் பொத்தியாவது மருந்தை உள்ளே போக வச்சிருவா.பக்கத்தில் லெப்பார் மாமா நின்னா ,தவியாய் தவிச்சுடுவார்.(அவரைப்பற்றி தனி இடுகை உள்ளது )
இது மாதிரி காரியங்களுக்கு உடந்தையா அந்த மருந்தை முதாலாவது குடித்து முடித்தவர்கள் மகா உதவிகள் செய்வதும் உண்டு..
என் தம்பி, தங்கச்சிங்க குடிக்கலைனா, இதை நான் ரொம்ப ஆதரவா, "நல்லா குடு"ன்னு சொல்லி அப்பாம்மாவுக்கு ஆதரவு தெரிவிப்பேன்.ஏன்னா நான் பட்ட கஷ்டம் மருந்து குடிக்கும் போது அவங்களும் புரிய வேண்டாமா? அதுக்குத்தான்.
மத்தவங்க பாக்கும் போது அது சித்ரவதை மாதிரி தெரியும்.குடிச்சி முடிச்சபிறகு, வாயிலே சீனியை படக்குன்னு போட்டு விழுங்கச் ச்சொல்லுவா.கண்கள் இரண்டிலும் கண்ணீர் வந்துரும்.அதுக்கு பிறகு தான் ஆளை விடுவா நாங்க பெரிய பிள்ளைகளா ஆனபொறகும் இந்த இம்சை அடிக்கடி நடக்கும்.
சரியா வெளிக்குப் போக "சுக பேதி அல்வா", சற்குண வைத்தியச் சாலையிலிருந்து வாங்கி கொடுக்கச் சொல்லுவா.வந்த பேதி நிக்கலன்னா இருக்கவே இருக்குன்னு "மைதீன் ஸ்டோர் அல்வா" தருவா.
வர்மம் தட்ட பாட்டப்பத்துவாத்தியார் கிட்டேயும்,சின்ன உளுக்கு வந்தால் மொன்னாமீத்தியார் கிட்டேயும் கூட்டிட்டுப் போவாள்.பிந்தின காலங்கள்ல மதார் வாத்தியார்,மோதீன் யூசுப் மாதிரி ஆட்கள் உளுக்கு தட்டுவார்கள்
இன்னிக்கும் என் போன்றவர்களுக்கு, இருமல் அது இதுன்னா தூது வாழை, கண்டங்கத்திரி குளம்பு. சாப்பிட அவளே காரணம்.என் பதின் பருவத்தில், முகத்தில் வந்த பருக்களுக்குக் கூட “குங்குமாதி லேபம்” வாங்கித்தந்தாள்.
அவளின் முதுமையில், என்னை திருநெல்வேலி சற்குண வைத்தியச்சாலை சென்று “பலா ஷிபா” லேகியம் வாங்கி வரச்செய்து சாப்பிடுவாள். “அதுலே உள்ள பேர் அப்பிடீ”ன்னு சொல்லுவா.
தென்காசி மேடை முதலாளி சகோதரர்கள் அப்துல் ரகுமான் சாகிப்,முகம்மது சாகிப் ஆகியோருக்கு ஒரு சித்தர் சொல்லிக்கொடுத்த லேகியம்கிறது தெரிஞ்சு, அதே மருந்தை கை, கால் மூட்டு வலி வந்தபோதெல்லாம் சாப்பிட்டு குணம் ஆகிடுவா.
நாம் நாட்டு மருந்தை மறந்தோம்.நோய்களுக்கு பட்டுக் கம்பளம் விரித்தோம்.
இன்னிக்கு பன்றிக்காச்சல்,சிக்குன் குனியா,டெங்கு காய்ச்சல் ஒவ்வொரு வட்டாரத்தையும்தாக்கித் தள்ளுகிறது. இன்னிக்கு வரையில் டெங்கு நாற்பத்து ரன்ன்டு பேரை பலி வாங்கி உள்ளது.
இதைத் தடுக்கும் தன்மையுள்ள மருந்துகள் சித்த வைத்தியத்தில் உள்ளதாக அறுதியிட்டு கூறுகிறார்கள்.அலோபதியில் இரத்தம் ஏற்றச்சொல்லுகிறார் கள். 
திருநெல்வேலி நாட்டாஸ்பத்திரியில், அதான் மாவட்ட சித்த வைத்திய மருத்துவமனையில் நில வேம்புத்தண்ணீர் வாங்க கூட்டம் அலை மோதுகிறது.அதன் அருமை இப்போது தெரிகிறது.அதைக் குடித்தால் நோய் குனமாகிறதாம்.

"மருந்தே உணவாக,வாழும் மனிதர்கள்;உணவே மருந்தாக வாழும் மானிடர்கள்"; என்று இரு பெரும் கட்சிகள் தான் உலகெங்கும் உள்ளார்கள்.
“கண்டதைக் கற்க பண்டிதனாவான். கண்டதை திங்க சீக்காளி ஆவான்”, என்பது திருநெல்வேலியில் சொலவடை ஆகும்.
அது மருந்து,சாப்பாடு இரண்டுக்கும் பொருந்தும்.நேரம் காலம் தெரியாமல் கண்டதைத் திங்குவதும்,கண்டபடித்தூங்குவதும் சீக்கு வர வரவேற்பு கூறும் என்றால் கையில் கிடைத்த இங்க்லீஷ் மருந்து மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும்சீக்கு வரும் என்பது தற்கால கண்டுபிடிப்பாகும். 
இதுல இருந்து தொடர் நோயாளியான மனித குலம் மீள்வது எவ்வாறு?எப்போது.?
அது தான் உடம்புல எந்த பாகத்துல வலி வந்தாலும் இ.சி.ஜி, எக்கோ,ஸ்கேன்,ட்ரெட் மில்,அதையும் தாண்டி ஆஞ்சியோ வரை போய் விட்டது.நோயைக் கண்டால்மனிதனுக்கு பயம் இல்லாமல் போய்விடுமா?
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”. அது தான் எல்லோருக்கும் வேண்டும்.

கருத்துகள் இல்லை: