சனி, 22 பிப்ரவரி, 2014

நெஞ்சம் மறப்பதில்லை.......

நெஞ்சம் மறப்பதில்லை.......

கொஞ்ச நாட்களாக....நான் சின்னஞ்சிறிய வயதில் ஓடியாடிய இடங்களைப் பார்க்கவேண்டும், அங்கே கொஞ்சப் பொழுதாவது அமர்ந்து வரவேண்டும் என்கிற தவிப்பு அவ்வப்போது மனதுக்குள் வந்து போகிறது....

அந்த வயதில் எனக்குக் கிடைத்தவாய்ப்புக்கள்., என் பிள்ளைகளுக்குக் கிடைத்துள்ளதா ?என்றால் இல்லை என்றே சொல்வேன்...

பள்ளிக்கூட கோடை விடுமுறைக்காலங்களில் "நம்ம ஆத்தில்"....அதான் பாளையங்கால்வாயில் தண்ணீர் வறண்டு போகும்....அந்த நேரங்களில் காலை 8 மணிக்கு எங்க வாப்பாவுடன் எங்க வீட்டுக்கு அடுத்துள்ள கரையைத்தொட்டு நடந்து கொண்டே "பெரியாத்துக்கு" ப் போவேன்....

அதுக்கு முந்தி "சின்னப்பையனா" இருந்த காலத்தில் எங்க வாப்பும்மாவுடன் போவேன்....
காலில் முள் குத்திவிடக்கூடாது என்பதற்காக, என்னை இடுப்பில் தூக்கிச்சுமந்து, வலது கையில், ஒரு வாளி நிறைய துணிகளை கொண்டு போய் ஆற்றில் துவைத்துக் கடும் சுமையோடு என்னைச் சுமந்து கொண்டுவருவாள்.......
அவ கூட போனால், அங்க இங்க,என்னை  நீஞ்ச விட மாட்டாள்....

துணிகளெல்லாம்  துவைத்து முடித்துவிட்டு அவள் குளிக்கும் நேரத்தில் தான், ஆத்தில் என்னை இறக்குவாள்....

அது வரையும், அடிக்கிற வெய்யில் என்னை தாக்காமல் இருக்க, அவ போட்டிருந்த துப்பட்டாவால் மூடி,
என்னை ஆத்து மணல் மேட்டில் உட்கார வைப்பாள்..

அந்த துப்பட்டாவில் , அவ தின்னுகிற வெத்திலை, பாக்கு, அங்கு விலாஸ் போயிலை.....மணம்.......இன்னும் என் நாசியில் நிற்கிறது... அடடா....அதை .நான் எங்க போய்ச்சொல்ல?...... மெய்மறந்து போய் இருப்பேன்..

அப்போவெல்லாம் மதகடை ஆத்தின் கரையில்பனை மரங்கள் கணக்கு வழக்கில்லாமல் இருக்கும்..

கோடை வெய்யில் காலங்களில், நுங்கும், பட்டையில் குடிக்க பதநீரும் கிடைக்கும்....அந்த வாசமே தனி தான்....
ஆடி மாசக் .'காத்தடி' நேரத்தில், என்னை அந்த பனை மரங்களின் கீழே, நடத்தி கூட்டிப் போக மாட்டாள்....என்னவாம்?  'பனை மரங்களில் இருந்து  மட்டை ..அல்லது ஓலை....கீல மண்டையில விழுந்திரக் கூடாது ..அதுக்காக" என்பாள்.

வயக்காட்டுக்குள் இறங்கி.....போக வைப்பாள்....

அவ இறப்பதற்கு முந்தி  ஒரு வருஷம் வரை,தினமும்  ஆத்தில் போய் குளிக்கிற பழக்கத்தை, அவள் விடவே இல்லை...

அவளுக்கு சுகரும் இல்லை....பிரஷரும் வந்ததில்லை....ஒரு மாசம் படுத்தாள்.....மூனு நாளு நாள் தான் அவ ரொம்பச் சிரமப் பட்டாள்...

என் கையோடு அவளின் கை சேர்த்து, .....நான் பிடிச்சிக்கிட்டு இருக்கும் போதே, அவ மூச்சும் அடங்கி நின்னது....

வழக்கமா பெரியாத்துக்கு அவ கூட குளிக்க வந்தால், கொஞ்ச தூரத்துல இருக்கிற ஆல மரத்தைப் பார்க்கக் கூட விட மாட்டாள்.....அதன் கிளைகளின் கோலம்...ஒரு மாதிரி மிரட்டலைக் கொடுக்கும்.....

காரணம் அந்த மரத்துக்கு பக்கத்தில் தான் எங்களோடுதெருவோடு இணைந்து இருக்கிற, கோனார்கள்,தேவர்கள்,பிள்ளைமார்கள்,ஆசாரிமார்கள்,செட்டியார்களின்  சுடுகாடு இருக்கிறது....

அதனால் தப்பித்தவறி கூட அந்தப்பக்கமே என்னைப் போக விட மாட்டாள்
காலத்தின் போக்கால்.... இருபது வருஷமா......வீட்டில் குளிக்கிற ஆசாமிகள் பட்டியலில் நானும் சேர்ந்து விட்டேன்...தாமிரபரணி யாரை "இங்க வராதே"ன்னு சொல்லுச்சு?


இப்போ பனைமரங்கள் எதையும் காணோம்....அழகான வயல் வரப்புகளையும் காணோம்...நத்தம் வழியா போய், தாமிரபரணிக் கரையில் சுடல மாடன் சாமிக் கோவில் வரைக்கும், கான்க்ரீட் ரோடு போட்ட புண்ணியத்துல,அது வரைக்கும் மோட்டார் சைக்கிள்ல போக முடிகிறது....கொஞ்ச தூரம் நடந்தேன்... 


இன்னைக்கி...... அந்தப் பாறையைத் தேடினேன்....அதோ...அங்கே......தெரிந்தது...கொஞ்ச நேரம் அதைப் பார்த்துக் கொண்டேன்.....தொட்டு தடவிக்கொண்டேன்...

அவ வழக்கமா அங்க தானே..... சோப்புப் போட்டு என்னை குளிக்க வைப்பாள்...."எம்மா." ...என்று அழைக்கனும்போல தொண்டை குழியில் சப்தம் வந்தது.... அவளோடு நான் சின்ன வயசில் பாறையில் அமர்ந்து .....காத்திருந்த காலமெல்லாம் கண்முன்னே வந்து சென்றது....சோப்பு போடுற அந்தப்பாறையை விட்டு இறங்கினேன்.. ....அதுக்கு மேல என்னால் அதைத் .தாங்கமுடியவில்லை....என்னை இவ்வளவு தூரம்..... வாழவைக்க முயற்சிகள் பல செய்த, எங்க வாப்பாவும்..... மனசெல்லாம் வந்து போனார்கள் ......."எம்மா."...என்றே  என் வாப்பும்மாவை அழைத்தேன்......அப்புறம் வாப்பா....என்றேன்....என்னை அறியாமல் .அழுதுவிட்டேன்.....அதுவும் சப்தமாக....
.எவ்வளவு நேரம் இதில் போனது என்று தெரியவில்லை....
போயிட்டாங்களே....என்ற நினைவுதான் மறுபடியும் வந்தது...
கொஞ்ச நேரம் கழித்து .....தண்ணீரில் இறங்கினேன்....மூழ்கி மூழ்கி எழுந்தேன்...
என் கூட யாரும் இல்லை....
எங்க வாப்பாவும்,......வாப்பும்மாவும் நான் தண்ணியில் "முங்கும்" போது மீண்டும்  என் நினைப்பில் வந்தார்கள் .......
தண்ணீரில் மூழ்கி எழுந்ததால் நினைவுகள் ....அமைதியாயின...

தூரத்தில் நண்பர்கள் சிலர் வந்து கொண்டு இருந்தார்கள்...

நான் இருந்த பாறைப் பக்கம் வந்து விட்டார்கள்...

என் தலையில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது........என் மூஞ்சியில தண்ணி ஒட்டிக் கொண்டு இருந்தது.......கொண்டு போய் இருந்த  துண்டால் துடைத்துக் கொண்டேன்....

அந்த பக்கம் வந்தவங்க போனவங்க எல்லாம்...

."என்ன விஷேசம்....நீங்க இங்க வந்திறிக்கியோ?" .....அப்படீன்னு விசாரிப்பு வேறு.....சிரிக்க முயற்சித்தேன்....

"இனி அடிக்கடி வர வேண்டியது தான்"...நான் சொன்னது அவங்க காதில்...விழ வில்லை...