புதன், 19 மார்ச், 2014

கடைப் பலகை.



கிராமப்புறங்களில் டீக்கடை பலகைகள் என்பவை முக்கியமான ஒரு பகுதியாகும்.  டீக்கடைகளுக்கு வந்தோமா டீய, கீய குடிச்சோமா போனோமான்னு இல்லாம ஊர்கதைகள் உலகத்து நடப்புகள் வரை பேசுவதற்கு ரொம்பத் தோதுவாக இருக்கும்.....

எவம் ஊருக்கு புதுசா,  அசலூரிலிருந்து வந்துருக்கான்?.....யார்வீட்டுல கடன், கன்னிகள் இருக்கு?.....சொத்துக்கள், வண்டி மாடுகள்,,சைக்கிள் ,மோட்டார் வண்டி, மண்டு மனைகள், புதுசா வாங்கிறவன்,  விக்கிறவன், "போனவன்-வந்தவன்"  ‘கதைகள்’  அங்கே தான் அலசப்படும்.

அது போக ‘ஒசுக்கு’ காலையில் வருகிற பத்திரிகைகள் பார்க்க வருகிற கூட்டங்களும் உண்டு.

இப்போ கலைஞர் கொடுத்த டி.வி.புண்ணியத்தில், ஜெயா டி.வி.யோ.கேப்டன் டிவியோ பார்த்துக் கிட்டு, ஊர் வம்பு பேசுற ஆட்கள் நிறைய இருப்பார்கள்..எப்போ முழிச்சாங் களோ? .எப்போ தின்னாங்களோ?.....என்று கேக்கிற அளவு எப்போதும் டீக் கடைகளிலேயே சதா....குடிஇருப்பவர்களும் உண்டு...

ஆனா...மேலப்பாளையத்தில்....டீக்கடை பெஞ்சுகள் உண்டு.அதில் கொஞ்ச நேரத்துக்கு மேல யாரும் நிரந்தரமா இருந்ததை  யாரும் பார்த்ததில்லை..

டீக்கடை வாசலில் டீயக் குடிச்சிட்டு, பக்கத்தில் இருக்கும் கடைப்பலகைகளில் காலை,  ஒரு அறு ,ஏழில் இருந்து,  எட்டுவரை கதை பேசும் சங்காத்திகள் நிறைய பேரை  பார்க்க முடியும்....என்னவோ அந்தக்கூட்டத்தில் பெரும்பாலும் ‘ஐம்பதை’க் கடந்தவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்..

இதுக்கு நேர மாறா, ராத்திரி பத்து மணிக்கு மேல் 'அங்க இங்க' நின்னு பேசுகிற சங்காத்திகளும் உண்டு.
புதுசா கல்யாணமானவன், அரபு நாட்டில் இருந்து வந்தவன், பொண்ணு பேசியதை சொல்பவன், மகனோ மகளோ, பிறந்ததை சொல்பவன்...அப்படீன்னு நிறைய நண்பர்கள் ராத்திரி வேளைகளில், பசார் முகைதீன் ஸ்டோர்அல்லது  சீனி லாலா  அல்வாயைத் தின்னு முடிச்சிட்டு,  அங்கனயே நின்னு,  அல்லது அந்தப்பக்கம் உள்ள கடைப்பலகைகளில் உக்கார்ந்து தம் சொந்தக் கதை சோகக்கதை பேசுகிற நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

முன்பெல்லாம் அநேகமாக எல்லாக் கடைகளிலும்,


கடைப் பலகைகள் உண்டு.கடையின் அகலத்துக்கு ஒன்றடியில் இருந்து மூனடி வரை கட்டில்களைப் போல நிரந்தரமாகப் போட்டிருப்பார்கள்.

என்னைக்காவது “ஆக்கிரமிப்ப தூக்கப்போறோம்’,.... அப்படின்னு அதிகாரிகள் படையெடுத்து வரும்போது தான் அந்தக் கடைப் பலகைகளை எங்கயாவது, ஒரு ரண்டு நாளைக்கு நவட்டி வைப்பார்கள்.

இப்பவெல்லாம் “எவம் வரப்போரான்னு?” துணிந்து கடைப்பலகைகளை தூக்கிட்டு சிமிண்ட் போட்டு செங்க கட்டே கட்டிட்டாங்க.

பல்வேறு உள்ளாட்சித் தேர்தல் ,மற்றும் சட்ட மன்ற, நாடாளுமன்றத்  தேர்தல் முடிவுகளை, கடைப்பலகைகளே முன்னறிவவிப்புச்  செய்த வரலாறுகள் உண்டு.

கடைப்பலகைகளில் முந்திய நாள் இரவில், பசார் திடலிலோ, ஜின்னா “மைதானத்திலோ” கொட்டிக் குளம் ,அல்லது கொடி மேடை திடலிலோ யாராவது ஒரு பேச்சாளர் பேசியது பற்றி, கார சார விவாதங்கள் நடக்கும்..

ஒவ்வொரு கட்சிக்கும் எங்க சின்ன வயசில், நட்சத்திர பேச்சாளர்கள் இருந்தார்கள். முஸ்லிம் லீக் கட்சியின் அப்துஸ் சமத், ஏ.எம்.யூசுப், காங்கிரஸ் கட்சியின் நெல்லைக் கண்ணன்,சின்ன அண்ணாமலை,பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க.வின்,ஆ.திராவிட மணி,.வெற்றி கொண்டான், நன்னிலம் நடராஜன், தீப்பொறி ஆறுமுகம், (அவர் போகாத கட்சி எதுவுமில்லை) நெல்லை புகாரி, ரகுமான் கான், ஆடலரசு,தஞ்சை கூத்தரசன், அண்ணா தி.மு.க.வின் நெல்லை பாலாஜி, கே.ஆர்.பி.மணி மொழியன், தொடர்ந்து  மூணு மணி நேரம் பேசி கொண்டே இருந்த  ஜனதாக் கட்சியின் நெல்லை ஜெப மணி, கம்யுனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா, தா.பாண்டியன் முதலானோருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

அதுபோல ஊரில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசிய ‘சின்னாமது’ அப்துல் காதர், செ.கா.மு.யூசுப், கி..மீ.காஜா,மணியாச்சி காஜா, பழக்கடை அப்துல்காதர், நாறங்கி அபுல் அசன்,எம்.ஒ.எ.சுக்கூர், இந்தியக்கம்யுனிஸ்ட் அப்துல் ஜப்பார், மார்க்சிஸ்ட் கிருஷ்ணன், பட்டக் கண்ணு ஆசாரி, முத்துக் கண்ணு செட்டியார் போன்றவர்கள்  நிறைய ரசிகர்களைக் கொண்டு இருந்தார்கள்.



லீக் கூட்டத்தில் மணியாச்சிகாஜா "எக்கு தப்பா" பேசினால், அவ்ளோதான்.......ஒரு வாரத்தில் சின்னாமது அப்துல் காதர் கண்டிப்பா காங்கிரஸ் கூட்டத்தில் பதில் சொல்லுவார்.

இரண்டு பேரும் என்ன பேசப் போகிறார்கள்?..... என்பதைக் கேட்க, நூற்றுக் கணக்கில் கூட்டங்களுக்கு திரண்டு வந்தவர்களும் இருந்தார்கள்.

சில வேளைகளில் மணியாச்சியை பிடிக்காத சிலர், சின்னாமது அத்துல் காதரிடம் போய், மணியாச்சி அதப் பேசினார் ,இதப் பேசினார் என்று கொளுத்திப் போடுவதும், அதே போன்றே மணியாச்சியிடம் சென்று சின்னாமது உங்க கிழி கிழின்னு கிழிச்சுத் தள்ளி விட்டார்ன்னு சொல்லி,  “இழுத்து’ விடுவதும்  உண்டு.

அப்புறம் என்ன கச்சேரி களை கட்டிவிடும். இப்படியெல்லாம் “நல்ல வேலைகள்” பல செய்ததில், கடைப்பலகைகள் கோஷ்ட்டிகளுக்கு தனியிடம் உண்டு"......

அவர்கள் பேசிய பேச்சுக்களைப் பற்றி, கடைப் பலகைகளில் காரசார விவாதங்கள் நடக்கும். சில வேளைகளில் மேடைகளில் பேசிய பேச்சுக்கள் ,அடிதடி வரைக் கொண்டு போய் உள்ளது....

1992 க்குப் பிறகு கடைப் பலகைகளில் உட்கார்ந்து பேசவே நடுக்கம் வந்து, யாருமே போகாத நிலைமை வந்துவிட்டது..

“பாழாப்போன டி.வி.வந்துலப்பா மனுஷங்களை, வீட்ட விட்டு வெளியே போக விட மாட்டேங்குது”...இப்படியும் சிலர் அங்கு வாரத மனுஷாட்களைப் பற்றி பேசுவதை நானே கேட்டேன்.

திங்கள், 10 மார்ச், 2014

பாட்டால் கட்டிப் போட்டவர்கள்...


நூறாண்டுகளுக்கும் மேலாக மேலப்பாளையம் மக்களோடு கலந்து, மகிழ்ச்சியையும்,பெருமிதத்தையும் தந்தது  தயிரா இசை...என்கிற ஒரு வகை இசை ஆகும்....தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதை "தப்' அல்லது "தப்ஸ்"  இசை என்றே அழைக்கிறார்கள்..
மேலப்பாளையத்தில்  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை,
நூருல் ஆரிபீன் கம்பெனி,
ஹைத்து ரூசியா கம்பெனி,
முகைதீன் அலங்காரக் கம்பெனி,
தங்கள் கம்பெனி,
கோட்டாத்துக் கம்பெனி,
காளை கம்பெனி,
ஓதி கம்பெனி,
இக்பால் இசைக்குழு ....என்று வரிசையாகத்  தயிரா கம்பெனிகள், நிறைய இருந்து வந்துள்ளன...
ஆனால் காலத்தின் ஓட்டத்தால், அவை எல்லாம் கலைந்து காணாமல் போய்,  "தயிரா" மற்றும் முரசு வடிவத்திலான "டங்கா" என்றால் என்றால் என்ன ?  என்று, அடையாளம் காட்ட, இக்பால் இசைக்குழு மட்டும் தான் கடைசி தருணத்தில், இருக்கிறது... அடுத்தத் தலை முறை இதை வீடியோ பதிவில் தான் பார்க்க முடியும் என்கிற நிலையில் உள்ளது...... 
எம்.கே. தியாக ராஜ பாகவதரும் , பி.யூ.சின்னப்பாவும், கிட்டப்பாவும்,டி.ஆர்.மகாலிங்கமும், பாடல்களால், மனசெல்லாம் ஆட்சி செய்த அந்தக்காலத்தில் நெசவாளிகள்,  சினிமா பாடல்களைப் பாடவில்லை...பிற்காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களும் பாடவில்லை.....மேலப்பாளையம் "வாலை தாசன்"என்கிற மஞ்சி முகம்மது எழுதித்தந்த பாடல்களைத்தான்....பாடி மகிழ்ந்தார்கள்......

பாகவதரின் பாடல்களையும்,எம்.ஜி.ஆர்.,சிவாஜி படப் பாடல்களையும் தாண்டி ,"காக்குழியில்" தறி நெய்த சாமான்யர்களின் பாடல்கள் பல தந்தது, வாலை தாசன் முகம்மது தான்.  அவரின் பாடல்களை இக்பால் இசைக்குழு..மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு தப்ஸ் இசைப் பாடகர்கள்  ,பக்கீர்கள் .ஆண்டுகள் எழுபதையும் தாண்டி, இன்னும் பாடிக்கொண்டு வருகிறார்கள்..
" நெய்யும் போதே ஞானக் கவிகள் பாடிக் கொண்டு நெய்ததால், அந்த வேஷ்ட்டியை உடுத்துக் கொண்டு செல்லும் போதெல்லாம் சிறப்பு" என்று கூறித் தந்த நெசவாளிகள்....நிறைய இருந்தார்கள்...
அந்தக்கால அரசியல் தலைவர்கள் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப்,அவரது சகோதரர் சட்ட மேதை கே.டி. எம்.அகமது இப்ராகிம், வழக்கறிஞர்கள் எல்.கே.எம்.அப்துல் ரகுமான், முகம்மது ஹுசைன் சாகிப், முதலான மூத்தவர்கள் காத்து நின்றது நெசவுத்தொழில் ஆகும்..........

மேலப்பளையத்தின் தறிகளில் உருவான தரமிக்க கைத்தறி ஆடைகள், பர்மா நாட்டின் ரங்கூன், மாண்ட்லே, அவ்கான், முதலான இடங்களிலும்  பாக்கிஸ்தான் நாட்டில் கராச்சி, பங்களா தேசில்  சிட்ட காங் மேற்கு வங்காளத்தில் கல்கத்தா கேரளத்தில்  ,கொச்சி,கொல்லம் போன்ற இடங்களிலும் புகழ் பெற்று விளங்கியது.

அப்போது மேலப்பாளையத்தில் மாஸ்ட்டர் வீவர்களாக விளங்கிய, என் பெரிய வாப்பாமார்களான LKS. பிரதர்ஸ் என்று அழைக்கப்பட்ட அப்துல்லா லெப்பை, முகம்மது மீரா முகைதீன் தரகனார், ஷேக் மதார், தக்கடி உதுமான் தரகனார் என்கிற T.S.M.O. உதுமான் சாகிப், லேஸ் ஹவுஸ் புகாரி சாகிப், மூளி கலந்தர் லெப்பை, சமாயினா யூசுப் லெப்பை, பருத்தி சாகுல் ஹமீது தரகனார், பருத்தி ஹனீபா தரகனார், முதலான பெரும் ஏற்றுமதியாளர்கள் இருந்தார்கள்....அவர்கள் இந்தக் கம்பெனிகளை ஆதரித்து வந்தார்கள்...
கைகளுக்கும்,கால்களுக்கும் சதா வேலையைக் கொடுத்த தறித்தொழிலின்  நெசவாளர்கள், நெய்யும் போதே பாடிக கொள்வார்கள்.....அவர்கள் பாடுகின்ற பாடல்களுக்கு தறியின் நூலைத்தாங்கிய ஓடம ஓடும் ஒலியும் மிதியின் சப்தமும் ஒரு வகை தாளத்தைக் கொடுக்கும்...மனம் மறந்து பாடுவார்கள்...   

 
சினிமாப் பாடல்களின் மோகத்தில் நெசவாளிகள், மூழ்கி விடாமல் ,ஆனால் அதே ராகத்தில் இஸ்லாமியப் பாடல்கள் பல பாடித்தந்த பெருமை வாலை தாசன் முகம்மது அவர்களுக்கு உண்டு....
அவர் எழுதிய ஒவ்வொரு பாடலிலும் அவரின் பெயர் விளங்கும் வகையில் "வாலை தாசன்" என்கிற பெயரை பதித்திருப்பார்.... வயிற்று வலியின் கடுமையால், 1964 கால கட்டத்தில் இறந்து போய் விட்டார்..
அவர் இருக்கும் போதே அவர் எழுதிய பாடல்களை அவரோடு கல்யாண வீடுகளிலும், ஹஜ் பயண வரவேற்புகளிலும், மார்க்க நிகழ்வுகளிலும் பாடியவர்கள், "காடி" புகாரி, "சமாயினா" முகம்மது ஹுசைன் வாத்தியார் ஆகிய இருவரும் ஆவார்கள்.மேலப்பாளையம் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களுக்கும் அறுபது வயதைத்தாண்டிய இந்த தயிராக்குழு ஹுசைன் வாத்தியார் மகன் சமாயினா சுலைமான் தலைமையில் தற்போது  பாடுவதற்கு சென்று வருகிறது.....

இன்று வயோதிக நிலையில்,  அரசு தரும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தில்,  தம் மகளோடு வாழ்ந்து வருகிற ஹுசைன் வாத்தியார்,  ஏழு கட்டை சுதியில் அவர் பாடிய பல்வேறு பாடல்களை, நினைவு படுத்தி பாடிக்  காட்டுகிறார்...........
காவேரிதான் சிங்காரி....



சிங்காரித்தான் காவேரி...".........சினிமா பாடல் மெட்டில்,அவர்கள் பாடிய பாடல் ஒன்று, மேலப்பாளையம் ஊரில் திரும்பிய பக்கமெல்லாம்  பெரும் பரபரப்பை கொண்டு வந்ததாம்... சிலர் மேடையேறி அடி தடிக்கும் வந்தார்களாம்...அது ஒரு காலம்.... என்று நீண்ட பெருமூச்சு விட்டு..... பாடிக் காட்டினார்... 
அந்தப்பாடல் இப்படி ஆரம்பித்தது

"மேதாவி போல் மாபாவி ....
மாபாவி போல்  மேதாவி.......

அருளைப் பெற்றவன் மேதாவி.....

அலைந்துகேட்டவன் மாபாவி....."...
அப்புறம் அனு பல்லவியாக ....
அந்தப்பாடலில்............
"சாகிப் என்ற பேரை வைத்து தடுமாறி....
சில....
சாகிபுகள் இருக்கிறார்கள் நிலை மாறி...."
என்று,  அந்தக் காலத்தில் சீர்திருத்தக் கருத்துக்களை தயிராவை வைத்துக் கொண்டு அவர் பாட, கடும் கண்டனங்களைச் சந்தித்த வற்றைச்சொல்லிக் காட்டினார்..........
அவரைப்பற்றி வரும் இன்னும் அதிகமாக பதிவிட வேண்டியதுள்ளது...