ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

மோட்டார் பைக்கும்....குருநாதரும்.


சில சம்பவங்கள்....சில முகங்கள்....எப்போதும் மனதை விட்டு மாறவே மாறாது ; மறையாது....
அதில் எங்க அண்ணன் செய்யது முகம்மது புகாரி..பற்றி நினைக்க ....நினைக்க பல சம்பவங்கள் மனதில் வந்து போகும்..அதில் எதைச் சொல்ல?......எத விட?
எங்க வீட்டில் பாட்டனார்கள் மூவர்......
அவர்கள் இலங்கை,பர்மா,கராச்சி,சிட்டகாங்,கொல்லம் முதலான ஊர்களில் கைத்தறி லுங்கிகள் மொத்தவணிகம் செய்தவர்கள்.
அந்த மூவருக்கும் ஆண் மக்கள் ஆறு பேர்கள் தாம்....
அந்த ஆறுபேர்களுக்கும் பதிமூன்று பேர்கள் பேரன்கள் ஆவோம்...நான் சொல்வது ஆண் வாரிசுகளை மட்டுமே..
எங்கள் இளமைக் காலம்.... பள்ளி...கல்லூரிக்கு செல்வதைத் தவிர, வயலுக்குப் போவது ,தண்ணீர் பாய்ச்சுவது ....சந்தைக்கு போவது.....ஆடுமாடுகளை பேனுவது.....என்று தொடர்ந்தது..அது சுகமானது.
எங்கள் பெரிய வாப்பா மகன் அப்துல்லா லெப்பை காக்கா.....அவரைத்தொடர்ந்து சின்ன காக்கா கபீர் என்று சிறிய வயதிலேயே அவர்கள் இருவரும் மாரடைப்பால் இறந்துபோய் விட்டார்கள்...
குடும்பத்தில் கார்கள் இருந்தாலும் அதன் மீது அந்தக் காலத்தில் எனக்கு ஆர்வம ஏற்படவில்லை.... மோட்டார் சைக்கிள் ஓட்டிப் பழக, சின்ன வயதில் நான் மிக ஆர்வம கொண்டிருந்தேன்...ஆனால் அந்த ராஜ்தூத் வகை மோட்டார்பைக்கை தொடக் கூட முடியாது.
பெரிய வாப்பா அவ்வளோ அழகா வைத்திருப்பார்....எங்க ஊரில் மொத்தமே நான்கு பேரிடம் மட்டும் தான் மோட்டார் சைக்கிள் இருந்த காலம் அது.....
என்றைக்காவது வயலுக்கோ அல்லது சந்தைக்கோ போகச்சொல்லி அவர் தந்து வண்டியை ஒட்டிக கொண்டு போனால் தான் உண்டு.
அதுவும் எங்க அண்ணன் மார்கள் மூத்த இருவர் மட்டுமே ஓட்ட அனுமதிப்பார்கள்.....என் போன்றவர்கள் பின்னால் உட்கார்ந்து தான் வரவேண்டும்.
ஒருநாள் எங்க சின்ன காக்காவை.....மோட்டார் சைக்கிள் ஓட்ட சொல்லித் தரச்சொல்லி படுத்தாத பாடு படுத்தினேன்...
"சரி....நாளைக்கு நம்ம வயலில் களை எடுக்க ஆளை எண்ணச் செல்லும் போது நீயும் வா.....பாக்கலாம்"..... என்று அவன் பொதுவாகவே சொல்லி வைத்தான்...
மறுநாள் காலை எட்டுமணிக்கெல்லாம் அவனோடு செல்ல அவங்க வீட்டுத் திண்ணையில் தயாராக இருந்து கொண்டேன்...
ஒரு பத்து மணிவாக்கில்...."வா..போலாம்"...ன்னு கூப்பிட்டான்...
அன்னைக்கு கடும் வெய்யில....ஊரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த தருவை வயக்காட்டுக்கு "ஆள எண்ண"..ப் போனோம்..
மதியம் இரண்டு ....மணியாச்சு .,வயலில் இருந்து ,வீட்டுக்கு புறப்பட்டோம்..
நிழலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் பக்கம் வந்தோம்.அண்ணன் அதன் விசையை உதைத்து..... உட்காரப் போனான்..
"சரி...சரி....நான் ஓட்டுறேன்" என்றேன்.
"இன்ன பார்...இது பிரேக்..."...
"அப்புறம்"....
"இது ஆக்சிலேட்டர்... "
"ம்ம்..."
"இது ...கிளட்ச்...."..முதல்ல...கிளட்சை...அழுத்திப் பிடிக்கணும்....அப்புறம் காலால் கியர் ராடை....கீழே அழுத்தனும்....அப்புறம் மெதுவா....ஆக்ஸிலேட்டரை கூட்டி....கிளட்ச விடனும் என்றான்..."
"சரி..சரி...ஆட்டும்"என்றேன்.
எல்லாம் சரியாத்தான் நடந்தது...
ராஜ்தூத் வண்டி டப...டப...வென்று போகத்துவங்கியது....நான் எதோ ....பறப்பதைப் போல அந்தப் பொழுதை....உணர்ந்தேன்.
கொஞ்ச தூரம் ஒட்டி இருப்பேன்...
பச்சையாற்றுப் பாலம் வந்தது....
"டேய்...அங்கே ஒரு பஸ் வருதுல........கொஞ்சம் ஆக்சிலேட்டர கொறல..."...
"கொறச்சாச்சு...அப்புறம் என்ன செய்ய?"...
"கியர கால வச்சு கீழே அமுக்குல...."....
.................................................................
"ஏல..ரொம்ப....நேரமா...கால வச்சு என்னத்த தேடுறே"?....
"கொஞ்சம் பொறு.....கியர் மாத்துற ராட காணோம்டா....அதைத் தான் நான் தேடுறேன்...." என்று நான் கொஞ்சம் லேசான பதட்டத்தோடு சொன்னேன்..
"என்ன..சொல்ல்றே..கியர் ராட....காணோமா?...என்னடா சொல்றே?சீக்கிரம் கியர மாத்துடா..."...என்று கடைசியாக அவன் சொன்னது மட்டும் கேட்டது...
எப்படியோ தட்டுத் தடுமாறி....வேர்த்து... விறுவிறுத்து....அந்த கட்டபொம்மன் பஸ் முன் பக்கம் போய் மோட்டார் சைக்கிளை...நிறுத்தினேன்...
குருநாதர்....... என்ன சொல்லப் போறாரோ?...என்ற தவிப்புடன்....
பின்னால் திரும்பிப் பார்த்தேன்........பகீர் என்றது.

ஆளைக்காணோம்.

பின்னால் தான இருந்தான்? எங்க போனான்?.....என்று அங்க இங்க...பதட்டத்தோடு தேடினேன்.
ரொம்ப தூ.......ரத்தில்..... நடு ரோட்டில் அவன் நிற்பதைப் பார்த்தேன்..அப்படியே மெதுவாக என் பக்கம் வந்து சேர்ந்தான்.
என்னால் மோட்டார் சைக்கிளில் கியர் மாற்றி, பிரேக் முடியவில்லை...என்றதும் எப்படித்தான்.....வண்டியை விட்டு குதித்தானோ?....என்னால் இன்று வரை புரிந்து கொள்ளமுடியவில்லை...
அவனைப் பார்த்து ரொம்ப நேரமாக.......நான் சிரிக்க....என்னைப் பார்த்து அவன் முறைக்க....
அதன் பின்னர்..... பஸ் என்னை விட்டு கடந்த ....வெகுதூரத்தில் ரோட்டில் கிடந்த, கியர் ஷிப்ட் ராடை...எடுத்து...கல்லை வைத்து தட்டி சொறுகி...வண்டியை " ஒரு மாதிரியா...."..ஸ்டார்ட் பண்ணினோம்.
கொஞ்சம் கெஞ்சிய குரலில்.... " நான் ஓட்டட்டுமா"..என்று மீண்டும் கேட்டேன்..

"ஏல...என்னை கொண்டு போய்.... வேற லாரி ....பஸ்ல...உள்ள விடவால ....இப்படி கேக்கிறே"?....என்று கேட்டுட்டு ஒரு முறை முறைச்சான்...
வீடு வந்து சேர்ற வரையும்..அவன் என்னை ஏசிக்கொண்டும்....நான் அவனை பதிலுக்குத் திட்டிக் கொண்டும் வந்தோம்...
அப்புறம்....நாலு வருஷமா ....என்கிட்டே அந்த வண்டிய ,  அவன் தரவே இல்லை....
நான் வேற ஆளைப பிடிச்சி ஓட்டப படிச்சது வேற கதை.....
இன்னைக்கும்..அதே கிண்டல்..அதே கேலி....அதே பொறுப்புணர்ச்சி....அதே பாசம் கொண்டு உரிமையோடு இருப்பவன் எங்க அண்ணன் செய்யது முகம்மது புகாரி..
(அவனைப் பற்றி சொல்ல நிறையவே இருக்கு...
அப்புறம் எனக்கு கார் ஓட்டப படிச்சுத்தந்ததும் அவன் தான்.)

எங்களை மனிதர்களாக்கிய சதக்கத்துல்லாஹ் அப்பாக்கல்லூரி.


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை,ரஹ்மத் நகரில் அமைத்துள்ளது  சதக்கத்துல்லா அப்பாக் கல்லூரி.....
என் போன்றவர்கள்...மனிதனாக வாழ அடிப்படை அமைத்துத்தந்தது எங்கள் கல்லூரி ...என்றே எப்போதும் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன்...
பேராசிரியர் நசீருதீன்,பேராசிரியர் முஹம்மது பாஸி ஆகிய இருவரும் முதல்வராக இருந்த காலத்தில் இளங்கலை கற்கும் வாய்ப்பு..... எங்களுக்குக் கிடைத்த காலத்தின் பரிசு என்றே சொல்லலாம்........
கல்லூரியில் சேரத் தகுதிக்குரிய பிளஸ் டூவின் மதிப்பெண்கள் என்று வைத்து இருந்ததைவிட இரண்டு மதிப்பெண்கள் குறைவாகவே எடுத்து இருந்தேன்....
நான் கல்லூரியில் நுழைவுப்படிவம் வாங்கச்சென்ற அன்று என்னோடு என் மைத்துனர் எஸ்.எம்.தாஜூதீனும் வாங்க வந்து இருந்தார்..
கடுமையாகக் காற்றடித்த, ஜூன் மாதத்தின் ஒருமதிய வேளையில், நானும் தாஜூதீனும் ஆளுக்கொரு சைக்கிளில் மேலப்பாளையத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த எங்கள் கல்லூரிக்குச் சென்றோம்..
தாஜ் எனக்கு முன்னால் படிவம் கேட்க, நானோ வரிசையில் அவனுக்கு அடுத்ததாக நின்று கொண்டு இருந்தேன்..
என் முறை வந்தது....ரூபாய் ஐம்பதைக் கைகளில் வைத்துக் கொண்டு காத்து நின்றேன்...
"எந்த குரூப்"? அங்கே கவுண்டரில் இருந்தவர் கேட்டார்.
"பி.ஏ ".....என்றேன்.
என் பக்கத்தில் நின்ற மைத்துனர் தாஜுதீன்.,"என்னது பி.ஏ.வா ?.....வெளங்கும்.......நீ மட்டும்தான் ஒத்த காக்காயா....அங்க போய் இருக்கணும்...நாங்கள்லாம் பி.காம் போறோம்...நல்லா யோசித்துக்கோ"....என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டான்.
அந்த ஒரு வார்த்தை..... என் வாழ்வை....படிப்பின் தலைவிதியையே மாற்றி ......அங்க இங்கசுத்தவச்சி.....அரசியல்மேடைகளில் ஏற்றி......பொதுவாழ்வில்.....கல்விப்பணியில்....போகவைத்து என்னைக் காடுவெட்டி விவசாயத்தில் கொண்டு வந்து விட்டுள்ளது....
நானோ பி.ஏ..படித்து பின்னர் பி.எல்.முடித்து வழக்கறிஞர் ஆகவேண்டும் என, நீண்ட நாட்கள் கனவுகள் கண்டு வந்தேன்....அந்தக்கருப்புக் கோட்...மற்றும் கவுனையும்,அணிந்து யாராவது சென்றால்...என் மனதுக்குள் இனம் புரியாத ஏக்கம் வந்தே செல்லுகிறது...என்னால் தாங்க முடிவதில்லை...வக்கீலாக ஆகணும் என்று நினைத்த ஆசை நிறைவேறாமல் .....கனவாகவே போய் விட்டது......
பி.காம்.பாடப்பிரிவில் சேர்ந்தேன்...கல்லூரி முதலில் பயத்தைத் தந்தது....பிரமிப்பாய் இருந்தது....கலகலப்பாய் இருந்த நட்பின் வட்டங்கள் விரிந்தது...
நாங்கள் சதக்கத்துல்லா அப்பாக கல்லூரியில் மாணவர்களாக இருந்தபோது “அக்கால வழக்கப்படி” ஸ்ட்டெப்...கட்டிங் ....ஸ்டைல் எங்களையும் பற்றிப் பிடித்திருந்தது...என்னோடு கல்லூரிக்கு உடன் வருகிற தாஜுதீன்,முத்துப்பாண்டி, மைதீன் அப்துல் காதர்,,அயூப்கான்,செய்யதுதாமீம்....உள்ளிட்ட அனைவரும் அதே ஸ்டைலில் தான் முடியை அலங்கரித்து இருந்தோம்.....
அதற்கு ஒருதலைராகம்.... வாழ்வே மாயம் முதலான தமிழ் சினிமா படங்களும்..இந்தியில் வெளி வந்த குர்பானி...ஷான்....தி பர்னிங் ட்ரெயின் .படங்களும் காரணமாய் அமைந்தன...
எங்களின் ஸ்டெப் கட்டிங் தலையழகை.... கலையழகை பேராசிரியர் நசீருதீன் ஒரு போதும் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்....ஒருநாள் கல்லூரி நுழைவாயில் அருகே நின்று கொண்டு இருந்த அவர், கடும் வேகமாகக் கடக்க முயன்ற எங்கள் கோஷ்ட்டியை தடுத்து நிறுத்தினார்.... .....
”என்ன.... கொண்டையை...வளர்ப்பதில்....போட்டியா வச்சு இருக்கீங்க?”...என்று கடும் சிரிப்பின் ஊடே என்னை பார்த்து கர்ஜித்தார்..... .... "ஒழுங்கு மரியாதையா....நாளைக்கு காலேஜ் வரும்போது....முடிய வெட்டிக்கிட்டு வரணும்"....
“சரி சார்”....
“நான் சொன்ன மாதிரி....அப்படி முடி வெட்டாம...வந்தீங்கன்னு வச்சுக்கோ.....நானே உங்க முடியவெல்லாம் வெட்டிப்புடுவேன்...வெட்டி.... ”.....
மனுஷன் பயங்கரமான ஆளாச்சே....செஞ்சாலும் செய்திடுவார்...என்று பயந்துபோய் அடுத்தநாளே நான் தலைமுடி அமைப்பை மாற்றிக்கொண்டேன்....
மத்த நண்பர்கள் எல்லாம் அவர் சொன்னதைக் கண்டு கொள்ளவே இல்லை...அடுத்து வந்த மாதங்களில்.எங்கள் முதல்வர் பேராசிரியர் நசீருதீன் உடல் நலிவுற்று இறந்து போனார்.
அவர்கள் காலத்திற்குப்பின்னர் பேராசிரியர் முஹம்மது பாஸி அவர்கள் முதல்வர் ஆனார்கள்...அவர்கள் முதல்வர் பணி முடித்து இன்று அமெரிக்காவில் உள்ளார்கள்....
இன்றும் என்னோடும்.... என் சகோதர சகோதரிகளோடும் தொலைபேசியின் மூலமாகத்தொடர்பு கொண்டும்,...ஒவ்வொரு முறை ஊர் வரும்போதும் எங்கள் விருந்துக்கு வருவதையும், வழக்கமாக வைத்துள்ளார்கள்...அதையும் தாண்டி முகநூலில் என்னோடு எப்போதும் தொடர்பில் அவர்கள் இருக்கிறார்கள்....
அவர்களுக்குப் பின்னர் முதல்வராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் முகம்மது பாரூக் அவர்களும் அப்படித்தான்....என் கல்லூரி முதல்வர்கள் மூவரோடு பாசமான நட்பு கொள்ளவைத்த காலங்களை அடிக்கடி... மனக்கண் முன் நிறுத்திப் பார்க்கிறேன்...
கல்லூரியின் எல்லா விழா நிகழ்வுகளுக்கும் அழைப்புகள் வருகின்றன....கல்லூரி உருவாக்கம் பெற உழைத்த எங்கள் மாமா மேலப்பாளையம் முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் அவர்களின் பிள்ளையாக, நானும் அவர்களோடு வலம் வந்ததால் கிடைத்த அன்பாகவும் அது இருக்கலாம்.
முன்னாள் மாணவர்கள் கூடும் கூட்டங்கள்,மற்றும் கல்லூரியின் அழைப்புக்கள் வருகிற அனைத்துக் கூட்டங்களிலும், பெரும்பாலும் கலந்து கொள்கிறேன்...கல்லூரியின் அழைப்பை தாய் வீட்டின் வரவேற்பாகவே எப்போதும் நான் எண்ணிக் கொள்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த வாரம் கல்லூரியில் இருந்து வந்த கடிதம் ஒன்றை இரவில் நெடு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன்....Board Of Studies in Commerce (Finance) என்கிற படிப்பிற்கு பாடத்திட்டம் அமைக்கிற குழுவில் உறுப்பினராக என்னையும் இணைத்து இருந்தார்கள்...என் கல்லூரி எனக்குத்தந்த மிகப்பெரிய கண்ணியமாக எண்ணுகிறேன்...அதைச்சொல்ல வேண்டுமென நினைத்து ஒரு வாரம் கழித்து இன்று தான் எழுதுகிறேன்..(கல்லூரியப்பற்றி எழுத இன்னும் நிறைய உள்ளது)